வி பி.குணசேகரன், தமிழக பழங்குடி மக்கள் சங்கத்தின் முதன்மை நிர்வாகிகளில் ஒருவர். சுமார் 30 ஆண்டுகளாகப் பழங்குடி மக்களுக்காக உழைத்துவருகிறவர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே தாமரைப்பாளையம் என்ற கிராமத்தில் வசிக்கும் இவரை ஈரோடு நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம். அவருடன் பேசியதில் இருந்து சில பகுதிகள்:
‘‘அரசின் கணக்கெடுப்புப் படி தமிழ்நாட்டில் 8 - 9 லட்சம் பழங்குடிகள் உள்ளனர். இதை முழுமையான கணக்கெடுப்பு என்று சொல்லி விட முடியாது. கணக்கெடுப்பு எடுக்கச் செல்லும் போது பல வீடுகள் மூடியே கிடக்கும். பழங்குடி மக்கள் திட்டமிட்டு வனங்களில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு தங்கள் தயவில்தான் பழங்குடிகள் காடுகளில் வாழ்கிறார்கள் என்று தங்கள் அதிகாரத்தை வனச்சட்டங்கள் மூலமாக வனத்துறை காட்டியது. அவர்களை வனம் சார்ந்த வாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்துவதில் குறியாக இருக்கிறார்கள். விலங்குகள் காப்பகங்கள் அமைக்கிறோம் என பழங்குடிகளை அப்புறப்படுத்தினார்கள். ஆனால் பழங்குடிகள் விலங்குகளுக்கு எதிரானவர்கள் அல்ல. யானையைக் கூட பெரியசாமி என்றுதான் அழைப்பார்கள். அவர்களின் காடுகளில் யானை வந்து தின்றுவிட்டுப்போனால் அந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருக்கும் என்று நம்பும் மனது அவர்களுடையது. ஆனால் நம் அரசு அவர்களை வனத்தை ஆக்கிரமிப்பவர்களாகப் பார்க்கிறது. எனவே கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அங்கிருந்து அந்நியப்படுத்தப்படுகிறார்கள். இன்னொரு புறம் வனத்தின் பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. ஒருபக்கம் வனம் அழிக்கப்படுகிறது. அல்லது மழையில்லாமல் காய்ந்துபோகிறது. இதைச் சரிசெய்ய நாம் எல்லோருமே சேர்ந்து ஒட்டுமொத்தமாக செயல்படவேண்டும்.
ஆரம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கிவந்தேன். எங்கள் கட்சி சார்பாக பழங்குடிகளைத் திரட்டச் சொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பணிக்கு நான் வந்தேன். குரலற்றவர்களாய் இருந்த அம்மக்களைத் திரட்டினோம். அவர்கள் ஒரே இடத்தில் இல்லை. பல்வேறு இடங்களில் சிறு சிறு குழுவாக வாழ்ந்தனர். கோடிக்கணக்கான சமவெளி மக்கள் இடையே அவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள் சிதறிக்கிடக்கிறார்கள். ஒன்றாக இவர்களைத் திரட்டுவது மிகவும் சிரமமான பணியாக இருந்தது. தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, 1993&ல் தர்மபுரியில் முதல் மாநாட்டை நடத்தினோம். அப்போது வாழப்பாடி ராமமூர்த்தி மத்திய அமைச்சர். அவரை அழைத்திருந்தோம். அப்போதுதான் தமிழகத்தின் பல அரசியல் கட்சிகளுக்கும் இப்படியெல்லாம் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள் என்பது பற்றிய பார்வையே உருவானது. நிலம் அவர்களுக்கு அடிப்படையான உரிமை. வனத்துறை அவர்களுடையதைப் பிடுங்கிக்கொள்கிறது என்கிற விஷயம் விவாதத்துக்கு வந்தது. அவர்களுக்கு வனத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகள், வனக்கல்லூரிகளில் சேர்க்கையில் முன்னுரிமை போன்ற கருத்துருக்கள் உருவாயின.
பழங்குடிகள் சிறுவிலங்குகளைக்கூட வேட்டையாட வனத்துறை தடைபோட்டார்கள். பழங்குடிகள் உணவுத்தேவைக்காக வேட்டையாடுகிறவர்கள். வேட்டையின்போது பார்த்தீர்கள் என்றால் கர்ப்பிணிகள், முதியவர்கள் செல்லவேண்டியதில்லை. அவர்களுக்கான பங்கு வந்துவிடும். வேட்டைக்குச் செல்லும் நாய்க்குக் கூட பங்கு உண்டு. ஆனால் இது தடை செய்யப்பட்டபின் அவர்களின் உடல்நலமே பாதிக்கப்பட்டுவிட்டது. அவர்களுக்கு ரேஷனில் அரிசி வழங்கப்பட்டு அவர்களின் உணவு முறை மாற்ற வலியுறுத்தப்பட்டது. அந்த அரிசி போதாதபோது அதை வாங்க அவர்களுக்குப் பணம் தேவை. அதற்காக அவர்கள் பணப்பயிர்களைச் சாகுபடி செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். உணவு மாறுபாட்டால் ரத்த சோகை போன்ற குறைபாடுகளால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். கல்வியை எடுத்துக் கொண்டால் சமவெளியில் கொடுக்கும் பாடத்திட்டத்தையே மலைப் பகுதியிலும் வைத்திருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி இருக்கிற வாழ்வாதாரங்களைப் பற்றி கற்றுத்தராத கல்வி, வனம் சார்ந்த கல்வியே இல்லை.
வனம் என்பது அரசின் பார்வையில் வருவாய் ஈட்டும் இடமாக உள்ளது. அரசு ஊழியர்களின் பார்வையும் இப்படித்தான் உள்ளது. அதனால்தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வனத்தை அழிக்க அரசே அனுமதி அளிக்கிறது. இந்த வணிகப்பார்வை பேராபத்து. ரப்பர் கழகம், பாக்சைட் நிறுவனங்கள் போன்றவற்றை தமிழ்நாட்டில் உதாரணமாகச் சொல்லலாம். டீ, காபி, எஸ்டேட்கள், நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் காடுகளை அழித்து யூகலிப்டஸ் மரங்களை நட்டிருக்கிறார்கள். சமவெளியில் இருப்பவர்கள் மலைகளில் வந்துகுடியேறி உள்ளனர். இந்தக் காரணங்களால் வனத்தின் பரப்பு குறைந்துவிட்டது. கரும்பு, வாழை, தென்னை மஞ்சள் பொன்ற வணிகப்பயிர்கள் பயிரிடுகிறார்கள். இதற்காக ஆழ்துளைக் குழாய்கள் தோண்டுகிறார்கள். தாளவாடி மலையில் 1000 அடிவரைக்கும் ஆழ்துளைக்குழாய்கள் போட்டுள்ளார்கள். சமவெளியில் கூட இதற்குக், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் மலைப்பகுதியில் வந்து இப்படி செய்தால் எப்படி? பூமிக்கு மேல் இருக்கும் தண்ணீரைத் தான் மனிதன் முதல் விலங்குகள் வரை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மண்ணுக்கு அடியில் இருக்கும் தண்ணீர் முழுக்க தாவரங்களுக்குத்தான் என்ற ஒரு இயற்கை நியதி உண்டு! அதை நீங்கள் அதிகப்படியாக உறிஞ்சி எடுப்பது ஆபத்தானது. இதனால் ஓடைகளில் இருக்கும் தண்ணீர் இல்லாமல் போனது. தாவரங்கள் வனப்பகுதியில் எப்படி வாழ முடியும்? இதற்கு இலவச மின்சாரம் வேறு. இந்த ஆழ்துளைக் கிணறுகளால் வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுமாறு அரசுத் துறைகளைத் தொடர்ந்து கேட்டுவருகிறோம். ஆனால் போர்வெல் வண்டிகள் தொடர்ந்து மலைப்பகுதிக்குள் நுழைந்துகொண்டுதான் இருக்கின்றன. பழங்குடிகள் மழை பெய்தால் விவசாயம் செய்வார்கள். இல்லையென்றால் ஆடுமாடுகள் மேய்ப்பார்கள். அவ்வளவுதான். ஆழ்துளைக் கிணறுகளை அவர்கள் தோண்ட மாட்டார்கள்.
மலையில் விளையும் பொருட்களை பழங்குடிகளே எடுத்து விற்றுக்கொள்ளலாம் என்று இப்போது சட்டமுள்ளது. ஆனால் இன்னும் ஒப்பந்தக்காரர்கள்தான் எடுத்துச் செல்கிறார்கள். இதற்கான அறிவுறுத்தலைச் செய்ய வனத்துறை இன்னும் தயங்குகிறது. அதைத் தடங்கலாகவும் பார்க்கிறார்கள்.
உதாரணத்துக்கு சீமார் எனப்படும் விளக்குமாறு செய்கிற குச்சிகள் தரும் புற்கள் காடுகளில் விளைகின்றன. அந்த புல்லை யானைகள் விரும்பி உண்ணும். அவற்றைத்தான் வெட்டி, காயவைத்து சீமார் ஆக மாற்றுவார்கள். நெல்லி, கடுக்காய், சீமார் குச்சிகள் போன்றவற்றுக்காக பழங்குடிகள் காட்டுக்குள் போய் சேகரித்துவருவார்கள். ஒப்பந்தக்காரர்கள் அவற்றை சொற்ப கூலிக்குப் பெற்றுச் செல்வார்கள். 2003&ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வன விளை பொருட்களை அம்மக்களே ஒரு குழு அமைத்து சேகரித்து விற்று கூலியைக் கொடுத்துவிட்டு மீதியை அவர்களே வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சட்டம் கொணரப்பட்டது. இப்போதிருக்கும் சட்டம்(2006), 2005 ஆம் ஆண்டு வரை குறைந்தது மூன்று தலைமுறைகளாக வனப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் அவர்களே வனப்பொருட்களை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறது. இப்படியெல்லாம் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும் இதையெல்லாம் வன அதிகாரிகள் கட்டுப்பாட்டில்தான் பல இடங்களில் வைத்துள்ளனர். புலிகள் சரணாலயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இடங்களில் பழங்குடிகள் நுழைய உரிமை கிடையாது என்று இவர்கள் இந்த சட்டத்துக்கு மாறாக ஒரு சுற்றறிக்கை விடுத்துள்ளார்கள். இந்தச் சட்டம் செல்லுமா அரசாணை செல்லுமா என்ற விவாதம் தொடர்கிறது. இப்படியெல்லாம் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும் இவற்றைப் பறிக்கின்ற வேலைகளைத்தான் அரசு நிர்வாகத்தின் பார்வையாக உள்ளது.
வனத்தை நாம் எப்படிப்பார்க்கிறோம்? வனம் நீரை உருவாக்கும் ஒரு தொழிற்சாலை. காரல் மார்க்ஸ் சொல்கிறார்: இயற்கையுடன் நீங்கள் கலந்து உறவாடுங்கள் என்று! இயற்கையை வெற்றிகொண்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்டால் இயற்கை உன்னைப் பழிவாங்கிவிடும் என்கிறார் ஏங்கெல்ஸ். ஆனால் இயற்கை பற்றிய புரிதல் அரசுக்கு இல்லை. அதிகாரிகளுக்கு இல்லை. இது ஒரு முதலாளித்துவ அரசு. இது எல்லாவற்றையும் லாபநோக்கில்தான் பார்க்கும். தமிழ்நாட்டிலும் இதே பார்வைதான். நில உச்சவரம்புச் சட்டப்படி 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் வைத்துக்கொள்ளலாம் என்பது சட்டம். மலைப்பகுதியில் ஒரு ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்பது 4 ஏக்கர். அதாவது மொத்தம் 60 ஏக்கர் வைத்துக்கொள்ளலாம். இன்று கட்சிகளின் முன்னாள் இன்னாள் வருங்கால அமைச்சர்கள் எல்லாம் மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் வைத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கணக்கெடுத்து இவற்றை நிலமற்ற பழங்குடிகளுக்கு வழங்கவேண்டும். ஈரோடு மாவட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் இங்குள்ள பழங்குடிகளில் ஐம்பது சதவீதம் பேரிடம் மட்டுமே பட்டா நிலம் உண்டு. மற்றவர்கள் வருவாய் தரிசு நிலம்தான் உண்டு. 1989 ல் நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவை வைத்துக் கொண்டு தமிழகம் முழுக்க மலைப்பகுதியில் பட்டா கொடுக்கக்கூடாது என்று ஆணை வைத்து தடுத்துவிட்டார்கள். வீட்டுமனைக்குக் கூட கிடையாது. பழங்குடிகள் நில உரிமை மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
வனத்தில் வாழும் பழங்குடிகளை வனத்திலேயே வைத்திருக்கவேண்டுமா? வெளியே இருக்கும் வசதிகளை அவர்கள் பெறவேண்டாமா?
வனத்தை விட்டு வெளியேறினால் அவர்களுக்கு என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது? வெளியே நல்ல கல்வி கற்று தகுதியுடன் இருப்பவர்க்கே எந்த வேலைவாய்ப்பும் இல்லை. அப்படி இருக்கையில் அவர்கள் வாழிடத்திலேயே அவர்களுக்கு எல்லாவற்றையும் கிடைக்க வைப்பதுதான் சரியானதாக இருக்க முடியும். தேசிய நீரோட்டத்தில் இணைக்கிறோம் என்கிறார்கள். நிறைய சிற்றோடைகள் இருக்கவேண்டும். சிற்றோடைகள் இருந்தால்தான் பெரிய நீரோட்டம் உருவாகும். இத்தனை ஆண்டுகாலம் அவர்கள் வனத்தில் இருந்தார்கள். அவர்களால் புலிகள் செத்துப்போய் விட்டனவா? யானைகள் அழிந்துவிட்டனவா? ஏதோ ஒன்றிரண்டு தவறுகள் நடந்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக அவர்களைக் குறைசொல்ல முடியாது. இன்று புலித்தோலை விரித்து அமர்ந்திருப்பது யார்? பழங்குடிகள் காலங்காலமாக இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தவர்கள். மரத்தை வெட்டவேண்டுமானால் அந்த மரத்திடம் அனுமதி கேட்பவர்கள் அவர்கள். இந்தப் பண்பை வளர்ப்பதா... இதற்கு சம்பந்தமில்லாமல் மரங்களைப் பணமாகப் பார்க்கச் செய்வது யார்? அவர்களின் கலாச்சாரத்தின் நல்ல கூறுகளை மேம்படுத்துவதற்கான கல்வியைக் கொடுக்க வேண்டும். வனம் என்பது கலவையான தாவரங்கள் இருக்கும் சூழல். ஆனால் வேளாண்மைத் துறை குச்சிக் கிழங்கையும் மக்காச்சோளத்தையும் திணித்து, உரம், பூச்சிக்கொல்லி கொடுத்து அங்கிருக்கும் தேனீக்களைக் கொல்லும் போக்குதான் உள்ளது. வேளாண்மைத்துறை நாங்கள் பூச்சிக் கொல்லிகளை அதிகமாக சிபாரிசு செய்வதில்லை என்று இப்போது சொல்கிறார்கள். அதைத்தானே அவன் முன்பு செய்துகொண்டிருந்தான்? பழங்குடிகளில் ஆணாதிக்கம் இல்லாமல் திருமணங்கள் நடப்பதுதான் வழக்கம். வரதட்சணை கொடுத்து மாப்பிள்ளை பார்ப்பது கிடையாது. பெண் எடுக்கிறவன்தான் தரவேண்டும். இது போன்ற ஒழுங்குகள் கொண்ட சமூகம். சமவெளிகளில்தான் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு சாதி. அங்கே அப்படி பிரிவுகளே இல்லை. இப்போது அவர்களிடமும் மாற்றங்கள் வருகின்றன. சமவெளிகளில் நடக்கிறதுபோல் பழங்குடிகளும் திருமணங்கள், திருவிழாக்கள் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். அது அவர்களின் கலாச்சாரம் இல்லை. இதை யார் அவர்களிடம் விதைத்தது? பழங்குடிகளுக்கு கோவிலே கிடையாது. ஆனால் இப்போது கோவில் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அங்கே பைக் இல்லாத வீடுகள் இல்லை. டி.வி. வீடுதோறும் உள்ளது. அவர்களின் வாழ்க்கையைச் சிதைக்கக்கூடிய நிலையில்தான் அரசுகளின் நடவடிக்கை உள்ளது.
சாதிச் சான்றிதழ் பெறுதலில் சிக்கல்கள் உள்ளனவா?
மற்ற பிரிவினர்களுக்கு சாதிச்சான்றிதழை தாசில்தார் கொடுப்பார். பழங்குடிகளுக்கு கோட்டாட்சியர் தான் வழங்கவேண்டும். அவர்கள் வேறு ஊர்களில் இருந்து வருகிறவர்கள். அவர்களுக்கு அப்பகுதி பற்றியே தெரியாது. அவர்கள் ஒரு பட்டியல் வைத்துள்ளனர். சுமார் 50 கேள்விகள் கேட்பார்கள். அதையெல்லாம் பூர்த்தி பண்ணினால்தான் அவர்கள் பழங்குடியினர். இதெல்லாம் சரியான வழி அல்ல. கிராம மக்களைக் கேட்டால் யார் பழங்குடி என்று தெரிந்துபோய்விடுகிறது. ரொம்ப குழப்பம் இருந்தால் குழு அமைத்து தீர்மானிக்கலாம். நாடோடிப் பழங்குடிகள் எனப்படும் தெலுங்கு மொழி பேசக்கூடிய காட்டுநாயக்கர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், சாட்டை நாயக்கர்கள், உறுமி நாயக்கர்கள், சாமக்கோடாங்கி, சவரிமுடி பின்னுவோர் ஆகியோர் ஊர் ஊராகப் போகிறவர்கள். தெலுங்கு பேசும் இவர்களின் பூர்விகம் இவர்களுக்கே தெரியாது. இவர்கள் பழங்குடி பட்டியலில் வரவேண்டும். இன்னும் வரவில்லை. இவர்கள் சில சில இடங்களில் இப்போது குடி அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தச் சான்றிதழும் இல்லை. இதற்கெல்லாம் வழக்கு தொடுத்து உயர்மன்றத்தில் தீர்ப்பு வாங்கினோம். ஆனால் நடவடிக்கை இல்லை. இதை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தும் பிரயோசன மில்லை. இம்மக்கள் சிறுபான்மையினர். இவர்களைப் பெருமளவில் திரட்டிப் போராட்டம் நடத்தவும் முடியவில்லை. வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான போராட்டம்?
பழங்குடி மக்களைத் திரட்டுவதற்காக தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பழங்குடி கிராமங்களுக்குச் சென்றபோதுதான் வீரப்பனைத் தேட வந்த சிறப்பு அதிரடிப்படையால் பிடித்துச் செல்லப்பட்ட மக்கள் பற்றிய தகவல்களைக் கேள்விப்பட்டோம். என்கவுண்டர் மோதல்கள் என்ற பெயரில் படுகொலைகள் நடந்த காலகட்டம் அது. காணாமல் போன பழங்குடியினருக்காக ஆட்கொணர்வு வழக்குபோட்டோம். மாதேஸ்வரன் மலையில் நடந்த சித்திரவதைகள் அனைவருக்கும் தெரிந்ததே. சட்டவிரோதக் காவலில் வைத்து கொடூரங்களை நிகழ்த்துவது பற்றி மனித உரிமை ஆணையத்துக்கு எழுதினோம். முறையாகப் பதிவுகளை வாங்கி புகார்களை அனுப்பினோம். அதன் பேரில் மனித உரிமை ஆணையம் சிறப்பு அதிரடிப்படையிடம் விளக்கம் கேட்டது. அவர்கள் இதில் புகார் கொடுத்திருப்பவர்கள் வீரப்பனின் ஆட்கள், எனவே இப்படி தவறாகக் கூறுகிறார்கள் என்று பதில் அனுப்பினர். அந்த பதிலை மத்திய மனித உரிமை ஆணையம் எங்களுக்கு அனுப்பியது. இன்னும் எத்தனை பேருடைய புகார்களை வேண்டுமானாலும் நாங்கள் அனுப்புகிறோம். நீங்களே விசாரணை நடத்தி முடிவு செய்யுங்கள் என்றோம். அதன் பின்னர்தான் நீதிபதி சதாசிவா, முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் இரு உறுப்பினர்கள் கொண்ட சதாசிவா கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கவே 2000 - வது ஆண்டு ஆகிவிட்டது. கோபிசெட்டிப்பாளையம், கொளத்தூர், மாதேஸ்வரன் மலை, சாம்ராஜ்நகர், மைசூர், பெங்களூர் போன்ற இடங்களில் விசாரணை நடந்தது. அதிரடிப்படையினரால் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனை போன்றவையும் நடந்தது. இதற்கிடையில் கர்நாடகா சார்பில் இந்த ஆணைய விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தில் தடையாணை வாங்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் வீரப்பன் ராஜ்குமாரைக் கடத்திச் சென்றிருந்தான். அப்போது அவன் வைத்த கோரிக்கைகளில் இந்த விசாரணை மீண்டும் தொடங்கவேண்டும் என்பதும் ஒன்று. இன்னொன்று அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்பதற்கு நிதி கேட்டிருந்தான் வீரப்பன். இரு அரசுகளும் சேர்ந்து தலா ஐந்து கோடி வைப்புத்தொகையாக கணக்கில் வைத்ததும் நடந்தது. இதைத்தொடர்ந்து விசாரணை மீண்டும் நடத்தப்பட்டது. இந்த விசாரணை கமிஷனின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது உடனே வெளியிடப்படவில்லை. அதை வெளியிடச் சொல்லி சில ஆண்டுகள் டெல்லிக்குப் படையெடுத்தோம். அதன்பின்னர்தான் அது வெளியிடப்பட்டது. முன்னதாக சதாசிவா ஆணையம் பாதிக்கப்பட்ட மேலும் பலரையும் விசாரிக்க மறுத்திருந்தது. அதிரடிப்படை அத்துமீறல் உண்மையா என்று விசாரிப்பதுதான் எங்கள் வரம்பு பாதிக்கப்பட்ட எல்லோரையும் விசாரிப்பது அல்ல என்று மறுத்துவிட்டார் நீதிபதி சதாசிவா. சுமார் 110 பேரை மட்டுமே அவர் விசாரித்திருந்தார். அதற்குமேல் விசாரிக்க வேண்டுமானால் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகுங்கள் என்றார். சுமார் 48 பேருக்கு மேல் கற்பழிப்பு, அருகில் இருந்து சுடப்படல், உறுப்புகள் சிதைப்பு, மனப்பாதிப்பு என்றெல்லாம் பாதிக்கப்பட்டதாகப் பட்டியலிட்டு அவர்களுக்கெல்லாம் இழப்புத்தொகையை பரிந்துரைத்தார். மீதிப்பேருக்கு இழப்பீடு பற்றி உங்கள் மாநில அரசுகளிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இழப்பீடு கோரி சத்தியமங்கலத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி ஒன்றைத் தொடங்கினோம். ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. கைது செய்யப்பட்டோம். அப்போது சட்டமன்றம் நடந்துகொண்டிருந்தது. முதல்வர் கலைஞர், பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலைக்கேட்டார். அவரது உதவியாளரைச் சந்தித்து ஆயிரத்து சில்லரை பேர் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலைக் கொடுத்துவிட்டு வந்தோம். என்ன இவ்வளவு பேர் கொண்ட பட்டியலைக் கொடுத்திருக்கிறீர்களே என்றிருக்கிறார் அவர். விசாரித்துச் சொல்வோம் என்றார். அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. மீண்டும் ஒருமுறை பேரணி நடத்த முயன்று மறுமுறையும் கைது ஆனோம். தமிழ்நாட்டு சார்பில் ஒதுக்கப்பட்ட 5 கோடியில் சதாசிவா கமிஷன் பரிந்துரைப்படி சுமார் 25 பேருக்குக் கொடுத்ததுபோக மீதி இரண்டரைக் கோடி பணம் இருக்கிறதே...அதை பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தால் என்ன என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆனாலும் பயனில்லை. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாமா என்ற யோசனை இப்போதும் சிந்தனையில் உள்ளது. இந்த பிரச்னையில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்துவிட்டு அத்துமீறல்கள் நடந்தது உண்மை என்று சொல்லி இருந்தாலும் அதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. மாநில அரசிடம் கேளுங்கள் என்று தள்ளிவிட்டார்கள். இரு மாநில அரசுகளும் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் அதிகாரிகளுக்கு இரட்டை பதவி உயர்வு கொடுத்துக் கொண்டாடின அல்லவா?
பழங்குடிகளின் பாரம்பரிய அறிவு பற்றி?
பழங்குடிகளுடன் காட்டுக்குள் செல்லும்போது அவர்களின் திறன் ஆச்சரியப்படுத்தும். திடீரென போகவேண்டாம் நிக்கலாம் என்பார்கள். ஏம்பா என்றால் யானை இருக்குது என்பார்கள். கண்ணுகெட்டிய தூரம் வரை யானையே இருக்காது. அது செடிகொடிகளை உடைக்கும் சப்தமும் இருக்காது. பின் எப்படிப்பா என்றால் இருக்குதுங்க என்பார்கள். நாம் தோண்டிக்கேட்டால் உங்களுக்குத் தெரியாதது எங்களுக்குத் தெரியுங்க என்பார்கள். அதாவது வாசமடிக்கிறதே தெரியவில்லையா என்பார்கள். கண், காது தாண்டி மூக்கையும் ஒரு முக்கியப் புலனாகப் பயன்படுத்துவார்கள். ஒருமுறை காட்டுக்கு ராஜா சிங்கம் தானே என்று அவர்களிடம் கேட்டேன். இல்லிங்க என்றார் பழங்குடி ஒருவர். அப்புறம் வேறு என்ன? புலியா? யானையா? இது எதுவும் இல்லிங்க.... காட்டுக்கு ராஜா உடும்புதாங்க என்றார் அவர். கூட இருந்த பிற பழங்குடிகளும் சிரித்துக்கொண்டே தலையாட்டினர். எப்படிங்க என்று கேட்டால்.. அதுக்குத்தானுங்க இரண்டு ஆணுறுப்பு இருக்கு என்றார்கள். அப்படியா? ஆமாங்க.. இரண்டு ஆணுறுப்பு இருக்கறதுதானே ராஜாவா இருக்க முடியும்? என்று கேட்டார்கள். உடும்புக்கு ஊணிணூடுஞுஞீ கஞுணடிண் என்பதே அதன்பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது. மூலிகைகளைப் பற்றி நிறைய சொல்வார்கள். பெண்கள் வீட்டுச்சட்டத்தில் கயிறு போட்டு கட்டி மண்டியிட்டு அமர்ந்து குழந்தை பெற்றுக்கொள்வர். வலிவந்து பிரசவம் ஆக நேரமானால் யானையின் நஞ்சுக்கொடியை கொண்டுவந்து போட்டு அதில் கால் முட்டி படுமாறு அமர்வர். குழந்தை எளிதாகப் பிறக்கும் என்று சொல்வார்கள்.
ஒருமுறை குமரி மாவட்டத்தில் எங்கள் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவரின் அம்மா இறந்துவிட்டார். துக்கம் விசாரிக்கப் போனோம். அடக்கம் பண்ண இடத்துக்குக் கூட்டிப்போனார். அந்த இடம் சுற்றி செங்கல் அடையாளம் வைத்திருந்தார்கள். பக்கத்திலேயே இன்னொரு அதே போல் செங்கல் அடையாளமிட்ட இடம். அதில் மரக்கன்று நட்டு வளர்ந்திருந்தது. அது எங்க தாத்தாவைப் புதைத்த இடம். அங்கு மரம் நட்டிருக்கிறோம். இங்கும் நடுவோம். அங்கு தெரியும் பலாமரம், முந்திரி, தென்னை என்று எல்லாமே அவர்களின் உறவினர்களைப் புதைத்து அந்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். அவர்கள் இறந்த பின்னும் எங்களுக்குப் பலன் கொடுக்கிறார்கள். இந்தக் காட்டில் இருக்கும் எல்லா மரங்களுமே இப்படி ஒரு வகையில் எங்கள் மூதாதையர்கள்தான். ஆகவே இந்தக் காடெல்லாம் எங்களுடையது என்கிறார்கள். வனப்பாதுகாப்பு என்பது அவர்களின் கலாச்சாரத்திலேயே இருக்கிறது என்கிற கோணத்தில் நாம் இதை அணுகவேண்டும்.
ஜூன், 2018.